முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிரான ஊழல், மோசடி வழக்கு எதிர்வரும் செப்டம்பரில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கடந்த 2010-2014ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆட்சிக்காலத்தில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் அரசாங்கத்துக்கு 17 இலட்சம் ரூபா இழப்பை ஏற்படுத்தியதாக லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தனவுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டின் கீழ் இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு உயர் நீதிமன்றத்தில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
குறித்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்ற போது திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகையொன்று இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி தடுப்பு ஆணைக்குழுவினால் லக்ஷ்மன் யாப்பாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வழக்கின் ஆரம்ப கட்ட விசாரணை எதிர்வரும் செப்டம்பர் 07ஆம் திகதி நடைபெறும் என்று கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு ஆட்சேபணைகளை அன்றையதினம் முன்வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

