முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஆபத்தான நிலையில் இல்லை என கொழும்பு தேசிய மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது.
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (22.08.2025) குற்றபுலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டார்.
கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை
இதனை தொடர்ந்து, அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவர் வெலிக்கடை சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர், நள்ளிரவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
ரணில் விக்ரமசிங்க, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் கடும் கண்காணிப்புக்கு மத்தியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆபத்தான நிலையில் இல்லை
இவ்வாறான பின்னணியில், வயது காரணமாக அவரது இரத்த அழுத்தம் சற்று அதிகமாக உள்ளது, ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மட்டுமே அவரை அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றியுள்ளோம் என பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆபத்தான நிலையில் இல்லை என்றும் கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

