முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பிரித்தானியாவின் வுல்வர்ஹம்டன் பல்கலைக்கழகம் மெய்யாகவே அழைப்பிதழ் அனுப்பி வைத்துள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி ரணிலின் ஊடகப் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அரச சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க அண்மையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த பல்கலைக்கழகம் ரணிலுக்கு அழைப்பிதழ் அனுப்பியதாக தனுஷ்க ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
ரணிலின் மனைவியான மைத்திரிக்கு கௌரவ கலாநிதி பட்டம் வழங்கும் பட்டமளிப்பு நிகழ்வில் பங்கேற்குமாறு பல்கலைக்கழகம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அழைப்பிதழ் தொடர்பில் விளக்கம் அளித்து வுல்வ்ஹம்டன் பல்கலைக் கழகம் வெளியிட்ட கடிதத்தையும் தனுஷ்க ராமநாயக்க தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வுல்வ்ஹம்டன் பல்கலைக்கழகம் அழைப்பு எதனையும் விடுக்கவில்லை என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பணிப்பாளர் தனுஷ்க ராமநாயக்க விளக்கமளித்துள்ளார்.
பிரித்தானிய பல்ககலைக் கழகத்தினால் ரணிலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட அழைப்பிதழ் தொடர்பிலான விபரங்களை ஏற்கனவே ஐக்கிய தேசியக் கட்சி வெளியிட்டிருந்தது, பல்ககலைக்கழகத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட ஆவணத்தை தாம் வெளியிடுவதாக தனுஷ்க தெரிவித்துள்ளார்.

