மாகாணசபைத் தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின் அவற்றை நீக்கி
அதிகார பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும் என நுவரெலியா மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி
இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
58 பேர் செய்த பணி ஒருவர் கையில்
அவர் மேலும் கூறுகையில், மத்திய மாகாணத்தில் மாகாணசபை உறுப்பினர்கள் 58 பேர் செய்த பணி தனியொரு
ஆளுநரின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவர் மூன்று மாவட்டங்களின்
தேவைகளையும் கவனிக்க வேண்டியவராக உள்ளார்.

இதேபோல் ஏனைய 8 மாகாணங்களிலும்
நிலைமை உள்ளது.
மாகாணசபை தேர்தல்களை நடத்த ஏதேனும் தடைகள் இருப்பின், அதனைத் தீர்த்து
வைத்து அதிகாரப் பரவலாக்கத்தை அரசு துரிதப்படுத்த வேண்டும்.
பாரிய பொறுப்பு
ஆளுநர் என்ற தனி நபரால் பலரது பணிகளை மேற்கொள்ளும் போது தனி ஒருவரின் கீழ்
பணியாற்றும் அரச அதிகாரிகளுக்குப் பாரிய பொறுப்புக்கள் உருவாகின்றன.

மாகாணசபைகள் முடக்கப்பட்டுள்ளதால் கிராம மட்டத்தில் சில முடிவுகளை எடுப்பதில்
தற்போது தடைகள் ஏற்பட்டுள்ளன.
பலரால் எடுக்கப்பட வேண்டிய சில முடிவுகள் ஒரு சிலரது கையில் குவிக்கப்படுள்ளன.
இதன் காரணமாகவே சில முடிவுகளுக்குக் காலதாமதம் ஏற்படுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.

