செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு தலையிடாது. ஆனால், பொலிஸ்
விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகளுக்குத் தேவையான வசதிகள் அனைத்தும்
செய்து கொடுக்கப்படும். நீதிமன்றத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் அரசின்
தலையீடு தேவையற்றதாகும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு
அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
செம்மணி…
அந்த அறிக்கையில் செம்மணிக்கு சுயாதீன
விசாரணைப் பொறிமுறையை நிறுவுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு சர்வதேச
நிபுணத்துவத்தின் அவசியமும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில்
மேற்கண்டவாறு கூறிய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, மேலும் குறிப்பிடுகையில்,
செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று
வருகின்றன. எனவே, அதனுடன் தொடர்புடைய விடயங்கள் நீதிமன்றத்துக்கே
அறிவிக்கப்படும்.
நீதிமன்றம் சுயாதீனமான நிறுவனமாகும் என்பது அனைவராலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கான வசதிகள் அரசால்
ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக விசேட குழுவொன்றினால் அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மறுபுறம் பொலிஸ் விசாரணைகளும் இடம்பெற்று வருகின்றன. நீதிமன்றத்துக்கு
அறிவிக்குமாறு அதற்கான தினம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அவற்றுக்கு நாம்
இடமளித்திருக்கின்றோம். அதற்கமைய அந்த விவகாரத்தில் நியாயமான செயற்பாடுகள்
இடம்பெற்று வருவதாக நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

