பிரதியமைச்சர் சுனில் வட்டகலவுக்கு எதிராக இரு தினங்களில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்போவதாக மொட்டுக் கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தென்னிலங்கை தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சுனில் வட்டகல தெரிவித்த கருத்து
அண்மையில் பிரதியமைச்சர் சுனில் வட்டகல, ஐஸ் போதைப் பொருள் தயாரிப்பதற்காக கொண்டுவரப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த அரசியல்வாதிகளின் புகைப்படங்களை காண்பித்தமை தொடர்பிலேயே சாகர காரியவசம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், மரங்கொத்தி வாழைமரத்தில் கொத்தி மாட்டிக் கொள்வது போல் பிரதியமைச்சர் சுனில் வட்டகல மொட்டுக் கட்சிக்கு சுமத்திய பொய்யான குற்றசாட்டில் மாட்டிக் கொண்டுள்ளார்.
நாம் அவருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்போம் என சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, ஏதோ சில கற்களை காட்டி ராஜபக்சர்களை தொடர்புபடுத்த பார்க்கின்றனர். குறித்த கொள்கலனை அரசாங்கமே வெளிவிட்டுள்ளது. இது ஒரு நாடகமாகும்.

அரசாங்கம் நியமித்த பொலிஸ் மா அதிபர் மற்றும் அவர்களின் தேர்தல் காலங்களில் உதவி செய்தவர்களே பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பிரதானி ஆகியோர். ஆதலால் இச்செயற்பாடுகளை நாம் போலியானதாவே நோக்குகிறோம் என்றும் சாகர காரியவசம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

