Demon Slayer: Infinity Castle
அனிமி சீரிஸில் மிகவும் பிரபலமான “டீமன் ஸ்லேயரின்” இன்ஃபினிட்டி காசெல் ஜப்பானிய டார்க் பேண்டஸி அனிமேஷன் திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போமா.

கதைக்களம்
சக்திவாய்ந்த டீமனான முசான் கிபுட்சுஜி தனது பரிமாண கோட்டையான இன்ஃபினிட்டி கோட்டைக்குள் டீமன் ஸ்லேயர் படையை உள்ளே சிக்க வைக்கிறார்.
அப்போது டீமன் ஸ்லேயர்கள் பிரிக்கப்பட்டு முசானை தேட முயற்சிக்கின்றனர்.
அதே சமயம் அவர்கள் டீமன்களை எதிர்கொள்கின்றனர்.
இது ஒருபுறமிருக்க, தனது சகோதரியின் மரணத்திற்கு பழிவாங்க டோமோவுடன் சண்டையிடுகிறாள் ஷினோபு.
ஆனால் அவளைக் கொன்று உட்கொள்கிறான் டோமோ.
மற்றொரு இடத்தில் டான்ஜிரோவும், கியூவும் தரவரிசை மூன்று கொண்ட அகாசாவுடன் சண்டையிடுகின்றனர்.

அவர்கள் இருவரின் முரட்டு தாக்குதல்களை அகாசா சுலபமாக முறியடிக்கிறார்.
இந்த சண்டை ஒருபுறம் நீடிக்க, கிரியா மற்றும் குய்னா, கனாட்டா ஆகியோர் இன்ஃபினிட்டி கோட்டையை கசுகை காகங்களுடன் வரைபடமாக்கி, அதன் மூலம் முக்கிய டீமனை தேடும் பணியில் ஈடுபடுகின்றனர்.
அதன் பின்னர் என்ன ஆனது? டீமன்ஸ் உடனான சண்டைகளில் டீமன் ஸ்லேயர்கள் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை.
படம் பற்றிய அலசல்
2020யில் வெளியான டீமன் ஸ்லேயர்: முகேன் ட்ரெயின் படத்தை இயக்கிய ஹருவோ சொடோசாகிதான் இப்படத்தை கொடுத்துள்ளார்.
ஏற்கனவே, கடந்த ஜூலை 18ஆம் தேதி இப்படம் ஜப்பானில் வெளியாகி சக்கைப்போடுபோட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்ட இப்படம், இன்று இந்தியா உள்ளிட்ட இன்னும் சில நாடுகளில் வெளியாகியுள்ளது.
அனிமி சீரிஸ் ரசிகர்களுக்கு செம விருந்தாக ஆக்ஷன் காட்சிகள் இப்படத்தில் பொறி பறக்கின்றன.
குறிப்பாக அகாசாவுடன் டான்ஜிரோவும், கியூவும் மோதும் சண்டைக்காட்சி மிரட்டலின் உச்சம்.
அதே சமயம் ஷினோபு மற்றும் டோமா இடையிலான சண்டைக்காட்சி ஒருபுறம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், டோமா கிண்டலாக பேசும் வசனங்கள் (தமிழ் டப்பிங்கில்) ரசிகர்களின் கைத்தட்டலை பெறுகின்றன.
பெரிய திரையில் அனிமேஷன் காட்சிகள் பிரம்மிப்பை தருகின்றன. இன்ஃபினிட்டி கோட்டைக்குள் நடக்கும் சண்டைக்காட்சிகள் தரம்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வரும் பின்கதை சுவாரஸ்யப்படுத்தினாலும், அகாசாவின் பிளாஷ்பேக் காட்சிகள் நீளமாக செல்வது சற்று சலிப்பை தருகிறது.
என்றாலும், அகாசாவின் மாஸ்டர் மற்றும் மகள் இருவருடைய காட்சிகள் எமோஷனல் டச்.
கிளைமேக்ஸ் மிரட்டலான ட்விஸ்ட்.
இந்த சீரிஸ், காமிக்ஸ் பற்றி தெரியாமல் ஒரு அனிமேஷன் படத்தைப் பார்க்கிறவர்களுக்கு இப்படத்தின் குழப்பத்தை ஏற்படுத்தலாம்.
என்றாலும், சுவாரஸ்யமாக செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே புதிதாக படம் பார்ப்பவர்களும் ரசிக்கலாம்.
க்ளாப்ஸ்
அனிமேஷன்
சண்டைக்காட்சிகள்
வசனங்கள்
இசை
திரைக்கதை
பல்ப்ஸ்
அகாசா பிளாஷ்பேக்கின் நீளம்
மொத்தத்தில் தரமான அனிமேஷன் விருந்தாக அமைந்துள்ளது இந்த ‘டீமன் ஸ்லேயர்: இன்ஃபினிட்டி காசெல்’. கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து ரசிக்கலாம்.
ரேட்டிங்: 3.5/5

