சில்லறை வழக்குகளைத் தாக்கல் செய்து படங்காட்டி விட்டு 2 நாட்களில் பிணையில் செல்ல அனுமதித்து, சீனி இறக்குமதியில் 6500 கோடி ரூபா ஊழல் செய்தமைக்காக ராஜபக்சர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா என சட்டத்தரணி சுகாஸ் கனகரத்தினம் அரசாங்கத்திடம் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
தமிழர் தரப்பில் காணப்படுகின்ற பிரச்சினைகளை இருட்டடிப்பு செய்யாமல் உடனடியாக தீர்த்துவைக்க வேண்டும் என தற்போதைய அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ள சட்டத்தரணி சுகாஸ் கணகரத்தினம், தனது முகநூலில் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டி கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அதன்படி, அவர் எழுப்பியுள்ள கேள்விகளில்,
ஓரிரவில் முடிவு
1) ஓரிரவில் ஜனாதிபதி முடிவெடுக்கக் கூடிய விடயமான அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யத் தயாரா?

2) நீங்கள் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகப் போராடும் கார்ல் மாக்ஸின் உண்மையான சீடர்களென்றால், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்கத் தயாரா?
3)சில்லறை வழக்குகளைத் தாக்கல் செய்து படங்காட்டி விட்டு 2 நாட்களில் பிணையில் செல்ல அனுமதித்து, சீனி இறக்குமதியில் 6500 கோடி ரூபா ஊழல் செய்தமைக்காக ராஜபக்சர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியுமா?
4) மத்திய வங்கிப் பிணைமுறி மோசடியில் 2500 கோடி ரூபா ஊழலுக்குத் துணைபோன ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய ஏன் தாமதம்?
வசீம் தாஜுடீன் கொலை
5) வசீம் தாஜுடீன் கொலை வழக்கில் மகிந்த ராஜபக்சவின் பிள்ளைகளைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தத் தயாரா?

6) தியாக தீபத்தின் அகிம்சையை உண்மையில் மதிப்பவர்களென்றால், அவரின் ஐந்து அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றத் தயாரா?
7) தேர்தல் காலத்தில் நீங்கள் கூறிய பச்சைப் பொய்களான IMF உடன்படிக்கையை இரத்துச் செய்வோம், வரிகளை நீக்குவோம், ஏழைகளையும் வீட்டுக்கொரு கார் வாங்கவைப்போம் போன்றவற்றை நிறைவேற்றத் தயாரா?
8)நீங்கள் இனவாதம் அற்றவர்களென்றால், குறைந்தபட்சம் பிரதமர் பதவியில் ஒரு தமிழரையோ அல்லது முஸ்லீமையோ உட்கார வைக்க முடியுமா?
பகிரங்க விவாதத்திற்குத் தயார்
9) சந்திரிகா அம்மையாரோடும் மகிந்த ராஜபக்சவோடும் சேர்ந்து நீங்கள் தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலைக்குத் துணைபோகவில்லை என்றால், சர்வதேச விசாரணைக்கு இணங்கத் தயாரா?

10) இவ்வளவும் ஏன், உங்கள் கட்சியின் ஸ்தாபகர் ரோகண விஜயவீர அவர்களின் துணைவியாரால் உங்கள் கட்சி மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்குப் பரிகாரம் வழங்கவாவது தயாரா?
முடிந்தால் மேற்குறித்தவற்றில் அரைவாசியைத் தன்னும் நிறைவேற்றிக் காட்டுங்கள். முடியாவிட்டால் “கூரையில ஏறிக் கோழி பிடிக்க முடியாதவன் வானத்திலேறி வைகுண்டம் போனானாம்” என்று வாயால் வடை சுடுவதை நிறுத்திக்கொள்ளுங்கள்!
இவற்றில் ஏதாவது உண்மைக்கு மாறானவைகளை நான் குறிப்பிட்டிருந்தால், உங்கள் கட்சி சார்ந்த எவருடனும் பகிரங்க விவாதத்திற்குத் தயார்” என சுட்டிக்காட்டியுள்ளார்.

