மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்காததற்காக பொதுப் பயன்பாட்டு ஆணையத்திற்கு நன்றி தெரிவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மக்களைக் கருத்தில் கொண்டு அரசாங்கம் முன்மொழிந்த 6.8% கட்டண உயர்வை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நிராகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் அரசாங்கம் கூறியது போல், வரும் நாட்களில் மின்சாரக் கட்டணத்தை 33% குறைப்பது குறித்து பரிசீலிக்குமாறும் அவர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் வாக்குறுதிகள்
இது தொடர்பில் அவர், “மின்சார நுகர்வோர் மற்றும் இந்த நாட்டின் ஒட்டுமொத்த குடிமக்களின் சார்பாக, நியாயமற்ற முறையில் மின்சாரக் கட்டணத்தை 6.8% அதிகரிக்கும் அரசாங்கத்தின் முடிவை நிராகரிக்க இன்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் எடுத்த முடிவுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் நிராகரிக்கப்பட்டதைப் போலவே, கடந்த ஜனாதிபதித் தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்களில் தற்போதைய அரசாங்கத்தால் வாக்குறுதியளிக்கப்பட்டபடி, மின்சாரக் கட்டணத்தை 33% குறைக்க அரசாங்கத்தை கட்டாயப்படுத்துமாறு பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.”” என குறிப்பிட்டுள்ளார்.

