அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு தாம் ஆதரவளிப்பதாக ஐக்கிய
மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இருப்பினும், அந்த நடவடிக்கைகள் அரசியல் நோக்கங்களால் உந்தப்படக்கூடாது
என்றும் அவர் வலியுறுத்தினார்.
பொருளாதார ஸ்திரத்தன்மை
சீனி இறக்குமதி மோசடி, சர்ச்சைக்குரிய வகையில் விடுவிக்கப்பட்ட 323
கொள்கலன்கள் மற்றும் இ-விசா மோசடி போன்ற விவகாரங்களைக் குறிப்பிட்ட அவர்,
இந்தச் சம்பவங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்றும் கேள்வி
எழுப்பினார்.

மேலும், நாட்டில் அடையப்பட்டுள்ள பேரின பொருளாதார ஸ்திரத்தன்மையை தாம்
அங்கீகரிப்பதாகவும், ஆனால் அதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவோ அல்லது
தற்போதைய அரசாங்கமோ உரிமை கொண்டாட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மாறாக, இந்த ஸ்திரத்தன்மைக்காக முன்னதாகப் பாடுபட்டவர்கள் இந்த நேரத்தில்
அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

