வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரியில் கல்வி பயிலும் ஒரு பகுதி ஆசிரிய, மாணவர்களுக்கு திடீர் சுகவீனம் ஏற்பட்ட நிலையில் 40 வரையிலான மாணவர்கள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று (14.11) அதிகாலை முதல் மாணவர்களுக்கு திடீர் காய்ச்சல்
மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து 7 மாணவர்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிகிச்சை
சில மாணவர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை
பெற்றுள்ளனர். கல்லூரி நிர்வாகம் கூறியே தனியார் மருந்தகங்களுக்கு சென்றதாக
மாணவர்கள் தெரிவித்தனர். சுகவீனமடைந்த சில மாணவர்கள் வீடுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சுகவீனம் தொடர்பாக மாணவர்களால் அவர்களின் பெற்றோர்களுக்கு
தெரியப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை அழைத்துச் செல்வதற்காக காலை
மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து பெற்றோர்கள் சிலர்
வருகை தந்திருந்தனர்.
இருப்பினும், அவர்கள் கல்லூரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. மூன்று மணி
நேரமாக அவர்கள் பிரதான வாயிலில் காக்க வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் பின்னர்
அவர்களாக உள்ளே சென்று உப பீடாதிபதியுடன் கலந்துரையாடியிருந்தனர்.
குற்றச்சாட்டு
இதன்போது, பிள்ளைகளை தங்களுடன் அனுப்புமாறு கோரியிருந்தனர்.
காய்ச்சல் ஏற்ப்பட்டதாக கூறும் மாணவர்கள் தமது சொந்த விடுமுறையில் வீடு செல்ல
முடியும் என நிர்வாகத்தால் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதுடன் அவர்களிடம்
கடிதம் பெறப்பட்ட பின்னர் பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.

இந்த விடயம் தொடர்பாக கல்லூரியின் பீடாதிபதியிடம் கேட்டபோது,
சுகவீனமுற்ற மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்தியர்கள்
பரிந்துரைத்தால் மாத்திரமே வீட்டிற்கு செல்ல அனுமதிக்க முடியும் என
தெரிவித்திருந்ததுடன், பெற்றோர்களின் கோரிக்கையின் பிரகாரம் அனுப்ப முடியாது
என தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கினால் கல்விச்
செயற்பாடுகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, கல்லூரியின் பீடாதிபதி பொறுப்பற்ற விதமாக செயற்படுவதாகவும், தமது
பிள்ளைகளின் பாதுகாப்பே முக்கியம் எனவும் பாதிகாகப்பட்ட ஆசிரிய மாணவர்களின்
பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

