இந்த நாட்டில் அனைவரும் சமம் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருக்குமாக
இருந்தால் எமது மாவீரர்களது கனவை நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என இலங்கைத்
தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
முல்லைத்தீவு, வள்ளிபுனத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர், உரித்துடையோர்
மதிப்பளித்தல் நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதியை எங்கள் கட்சி சந்தித்துப் பேசியபோது ஒரு மணித்தியாலம் அரசியல் தீர்வு
குறித்து பேசினோம். 70 வருடங்களாக வெவ்வேறு வடிவத்திலான போராட்டங்களை நடத்தி
வருகின்றோம்.
அதிகாரப் பகிர்வு
உலகத்தில் எந்தச் சமூகமும், எந்த மக்களும் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ
மாட்டார்கள். அதனை ஏற்கவும் மாட்டார்கள். அப்படியிருக்க ஒரு ஜனநாயகக்
கட்டமைப்பில் ஒரு மக்கள் எண்ணிக்கையில் 3 மடங்காக இருக்கின்றபோது
எண்ணிக்கையில் குறைந்ததாகக் காணப்படும் சமூகம் எப்படி சம அந்தஸ்து உடையவர்களாக
வாழ முடியும்?

ஏனெனில் வாக்கெடுப்பு நடத்தினால் அது ஒரு பக்கமாக சாய்ந்துதான்
நிற்கும். அதனால் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம்.
நாட்டில் நாங்கள்
பெரும்பான்மையாக வாழாவிட்டாலும் நாம் பெரும்பான்மையாக வாழ்கின்ற பிரதேசங்களில் எங்களுக்கான அரச அங்கீகாரங்களைப் பகிர்ந்து கொடுங்கள் எனக் கேட்பதன்
தார்ப்பரியம், நியாயப்பாடு அதுதான்.

இது செய்யப்பட வேண்டும். எவர் நிமித்தம்
செய்யப்படாது விட்டாலும் மடிந்துபோன எங்களுடைய மாவீரர்களது தியாகத்தின்
நிமித்தமாக அது செய்யப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

