இந்திய அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இரண்டு கள மருத்துவமனை அமைப்புகள், அவற்றிற்குத் தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் இந்திய இராணுவ மருத்துவர்கள் குழுவை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஒரு சிறப்பு விமானம் நேற்று (30) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த மருத்துவமனை அமைப்புகள், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கள மருத்துவமனை அமைப்புகள்
இந்த கள மருத்துவமனை அமைப்புகள் அறுவை சிகிச்சை, ஆய்வக சோதனைகள், எக்ஸ்ரே வசதிகள் போன்ற மருத்துவமனைக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன.

இந்த மருத்துவமனைகளின் பணிகள் நடைமுறையில் எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றன என்பது குறித்து இலங்கையில் உள்ள மருத்துவர்களுக்குத் தேவையான பயிற்சியை வழங்க 05 இந்திய இராணுவ மருத்துவர்கள் கொண்ட குழுவும் இந்த விமானத்தில் வந்துள்ளன.
குறுகிய காலத்தில் இந்தப் பயிற்சியை வழங்கிய பிறகு, அவர்கள் தங்கள் பணியை உள்ளூர் மருத்துவர்களிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் நாட்டை விட்டு வெளியேற திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மருத்துவமனை அமைப்புகளை ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படை சி. – 130 சரக்கு விமானம், இந்தியாவின் புது டில்லியில் இருந்து 11/30 அன்று இரவு 08.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன உட்பட சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழுவும், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை விமானப்படையின் அதிகாரிகள் குழுவும் இந்த விமானத்தில் வந்த குழுவை வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்தனர்.
திருகோணமலைக்கு உதவிப்பொருட்களுடன் வந்த கப்பல்
இதேவேளை இலங்கைக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிக்கொண்டு இந்திய கடற்படை ரோந்து கப்பலான ஐஎன்எஸ் சுகன்யா, திருகோணமலைக்கு வந்துள்ளது.

இந்தியாவின் ஒபரேஷன் சாகர் பந்துவின் ஒரு பகுதியாக 27 தொன்களுக்கும் அதிகமான உதவிகள் வான்வழி மற்றும் கடல் வழியாக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இந்தியாவின் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த மொத்தம் 80 பணியாளர்களைக் கொண்ட இரண்டு நகர்ப்புற தேடல் மற்றும் மீட்புக் குழுக்களும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

