அப்பாவி மக்களை தூண்டி அவர்களின் சிந்தனையை மாற்றி அனர்த்தத்தில் அரசியல்
செய்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என ஆளும் கட்சியான தேசிய மக்கள்
சக்தியிடம் கோரிக்கை விடுப்பதாக வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா ஜெசிதன் தெரிவித்துள்ளார்.
வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை அலுவலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து
தெரிவித்த போதே இதனை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில் “எமது பிரதேசத்தில் இருக்கக்கூடிய கல்லுண்டாய் குடியிருப்பு பகுதி மக்கள் கடந்த
ஐந்தாம் திகதி குறித்த பகுதிக்கு தண்ணீர் கொடுக்க சென்ற வாகனத்தை இடைமறித்து
போராட்டத்தை நடத்தி இருந்தனர்.
பிரதேச சபை
பிரதேச சபை நீண்ட காலமாக முழுமையாக தண்ணீர் வழங்குவதில்லை எனவும் அதனால் தாம்
மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
2019 ஆம் ஆண்டு தற்போது இருக்கக்கூடிய ஆளுநர், யாழ்ப்பாண மாவட்ட செயலாளராக
இருந்த காலத்தில் தான் அந்த குடியிருப்பு கல்லுண்டாயில் அமைக்கப்பட்டது. அந்த
நாள் முதல் அந்த குடியிருப்புக்கான தண்ணீர் சேவையை பிரதேச செயலகம்
வழங்கியிருந்தது.

ஆனால் பிரதேச செயலகம் அதனை தொடர்ச்சியாக செய்ய முடியாத நிலை
ஏற்பட்டதனால் எம்மிடம் கேட்டதற்கமைய ஐந்து வருடங்களாக இதனை நாம் செய்கிறோம்.
தண்ணீர் இல்லாமல் அந்த குடியிருப்பில் யாரும் மரணித்ததாகவோ ஏதும் நடந்ததாகவோ
இதுவரை எந்த தகவலும் பதிவில் இல்லை.
பிரதேச சபை தன்னுடைய கடமையை மிகச் சரியாக
செய்து வருகிறது. பிரதேச சபையின் வளங்களை பொறுத்தவரையில் சில தடங்கலும்
இடையூறுகளும் ஏற்படும் நேரங்களில் தண்ணீர் போகின்ற நேரங்கள் தவறினாலும் அந்த
தண்ணீர் ஏதோவொரு விதத்தில் சென்றடையும்.
கல்லுண்டாயில் மழை அதிகம் பெய்யும் நேரத்தில் பெரிய பவுசர்களை அங்கு கொண்டு
செல்ல முடியாது. அது புதைந்து விடும். பிறகு அதனை வெளியில் கொண்டுவர முடியாது” என கூறியுள்ளார்.

