தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலவச கல்வியை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சர்வஜன பாலய கட்சியின் துணைத் தலைவரும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான கலாநிதி சன்ன ஜயசுமன இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
கல்வி அமைச்சினால் நடைமுறைப்படுத்துவதற்கு ஆயத்தப்படுத்தப்பட்டுள்ள கல்வி மறுசீரமைப்பு திட்டங்கள் எவ்வித ஆய்வுக்கும் உட்படுத்தப்படாது நினைத்தவாறு அறிமுகம் செய்யப்படுவதாக என குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன் மூலம் நாட்டின் இளம் தலைமுறையினர் பாதிக்கப்படக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
தவணை பரீட்சை மற்றும் மதிப்பீடுகளை ரத்து செய்வதன் மூலம் மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் ஒழுங்கற்ற நிலைக்கு செல்லக் கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக சீ.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கரவினால் அறிமுகம் செய்யப்பட்ட இலவச கல்வி முறைமை அழிவடையும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் செல்வந்தர்கள் வெளிநாட்டு பாடவிதானங்களை கற்பிக்கும் சர்வதேச பாடசாலைகளில் கற்று உயர் நிலையை அடையக்கூடிய சாத்தியம் உண்டு என தெரிவித்துள்ளார்.
இலவச கல்வியை பயன்படுத்தி கற்ற ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த கல்வி மறுசீரமைப்பு கொள்கைக்கு ஆதரவு அளிப்பது ஆச்சரியம் அளிப்பதாக தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு சக்திகளின் தேவைக்கு ஏற்ப வரலாறு பாடத்தை அத்தியாவசியமற்றதாக மாற்ற முயற்சிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
உத்தேச கல்வியை மறுசீரமைப்பு திட்டங்களை அமுல்படுத்துவதனை உடன் நிறுத்தி போதிய அளவு கலந்துரையாடல்களின் பின்னர் இந்த மறுசீரமைப்புகளை அமுல்படுத்த வேண்டும் என கலாநிதி சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

