ஜனநாயகத்தை பாதுகாப்பதாக கூறி ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், சர்வாதிகாரத்தை
நோக்கி செல்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று(22/12/2025) கருத்து தெரிவிக்கும் பொழுதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சர்வதிகார ஆட்சிமுறை
அவர் மேலும் கூறியதாவது,
திருகோணமலை மாவட்ட கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான உப குழு கூட்டம்
திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஆளுங்கட்சியின் ரொஷான் அக்மீமன எம் பியால்
ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மாவட்ட மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எனக்கோ குகதாசன் எம். பிக்கோ இந்த
கூட்டத்திற்கு அழைப்பு இல்லை.

மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்க்கட்சியின் வசம் இருப்பதால்
உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்களுக்கும் அழைப்பு இல்லை.
தனியொரு நாடாளுமன்ற உறுப்பினரால் அதிகாரிகளை வைத்து இந்த கூட்டம் நடைபெறுகின்றது.
இதன்மூலம் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து சொல்வதற்கான வாய்ப்பை இந்த
அரசாங்கம் முடக்கியுள்ளது. அத்துடன், தற்போதைய அரசாங்கம் சர்வாதிகாரத்தை நோக்கி செல்வது தெளிவாகின்றது.
மேலும், இதுவொரு ஆபத்தான நிலை என்பதை பொதுமக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என எச்சரித்துள்ளார்.

