சர்ச்சைக்குரிய ‘ஒன்டன்செட்ரான்’ (Ondansetron) ஊசி மருந்துகள் தொடர்பான
அனைத்து விபரங்களையும், இலங்கையிலுள்ள ஆய்வகங்களின் தரப் பரிசோதனைத் திறனையும்
சுகாதார அமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்
பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றையதினம் (22) ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்ட அவர்,
குறித்த ஊசி மருந்துகளின்
தரம் குறித்து எழுந்துள்ள சந்தேகங்களை விசாரிக்க உலக சுகாதார அமைப்பினால்
அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் இலங்கையில் உள்ளனவா என்று கேள்வி எழுப்பினார்.
சுகாதாரப் பாதுகாப்பு
சந்தேகத்திற்குரிய இந்த மருந்துத் தொகுதிகளை முறையான ஆய்வுக்கு
உட்படுத்துவதற்கான வசதிகள் மற்றும் நிபுணத்துவத் திறன் இலங்கை ஆய்வகங்களுக்கு
இருக்கின்றனவா என்பது குறித்து தெளிவான விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என அவர்
வலியுறுத்தினார்.

அத்துடன், அதிநவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்களை அமைப்பதற்கு அரசாங்கம்
திட்டமிட்டுள்ளதா என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளனவா
என்றும் அவர் தனது அறிக்கையில் கேள்வியெழுப்பியுள்ளார்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்புடன் தொடர்புடைய இந்த விடயத்தில் சுகாதார
அமைச்சர் உண்மைகளை மறைக்காமல் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும் என அவர்
மேலும் குறிப்பிட்டார்.

