அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த எப்ஸ்டீன் ஆவணங்கள் பொய்யானவை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க நீதித்துறை இவ்வாறு விளக்கம் அளித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரபல அமெரிக்க நிதியாளர் ஜெப்ரி எப்ஸ்டீன், சிறையிலேயே தவறான முடிவெடுத்து உயிரிழந்தார்.
குற்றச்சாட்டுகள்
இந்தநிலையில், அவர் மீதான விசாரணை ஆவணங்களில் ட்ரம்ப் குறித்து பல குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியது.
குறிப்பாக, பல ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவரை ட்ரம்ப் தகாத முறைக்கு உட்படுத்தியதாகவும் குறித்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இது தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த நிலையில் குறித்த ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டது.
இந்த ஆவணங்கள் வெளியான 24 மணிநேரத்தில் ஆவணங்களில் இடம்பெற்றிருந்த ட்ரம்ப் தொடர்பான புகைப்படங்கள், எந்தவித விளக்கமும் இன்றி நீக்கப்பட்டன.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அந்தப் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டன.
எதிரான உண்மை
இதையடுத்து, ட்ரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து அமெரிக்க நீதித்துறை விளக்கம் அளித்த நிலையில் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “எப்ஸ்டீன் தொடர்பான 30 ஆயிரம் பக்க ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

2020 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாக எப்பிஐயிடம் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களில் ட்ரம்புக்கு எதிரான உண்மையில்லாத குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவை முழுக்க முழுக்க அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளாகும் எனவே, இது ட்ரம்புக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது.
சட்டத்தின் மீதான நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்கும் விதமாக, இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றது.
உண்மைத் தன்மை
லேரி நசாருக்கு எப்ஸ்டீன் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கடிதத்தின் உண்மைத் தன்மையை நீதித்துறை ஆய்வு செய்து வருகின்றது.
விரைவில் கூடுதல் தகவல்களை வழங்க முயற்சிப்போம், இந்தக் கடிதத்தில் உள்ள அஞ்சல் குறியீடு விர்ஜினியாவைச் சேர்ந்தது.

அந்த சமயத்தில் எப்ஸ்டீன் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அத்தோடு பதில் முகவரியும் தவறாக இருந்தது.
அதில், எப்ஸ்டீனின் கைதி எண் குறிப்பிடவில்லை மற்றும் அனைத்திற்கும் மேலாக எப்ஸ்டீன் மரணமடைந்த மூன்று நாட்களுக்குப் பிறகே இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில் இருந்த கையெழுத்து எப்ஸ்டீனின் கையெழுத்துடன் பொருந்தவில்லை எனவே லேரி நசாருக்கு எப்ஸ்டீன் அனுப்பிய கடிதம் போலியானது என தெரியவந்துள்ளது.
இருப்பினும், சட்ட ரீதியாக தேவைப்படும் அனைத்து ஆவணங்களையும் நீதித்துறை தொடர்ந்து வெளியிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

