தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்திற்கு தடைகள் விதித்து, பொலிஸாரை பயன்படுத்தி நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குத் தள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம்சாட்டியுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் மக்களுக்கு உண்மையான தகவல்களை அறியும் உரிமை பறிக்கப்பட்டு, ஒரு பொலிஸ் அரசாட்சி நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனநாயகம்
ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், ஊடகச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, சுயாதீன ஊடகங்களுக்கு இடமளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதன் மூலம் கண்காணிப்பு மற்றும் சமநிலை செயல்முறைக்கு வலுவாக இருக்கும் போதும், தற்போதைய அரசு சுயாதீன ஊடகச் செயல்பாடுகளில் தலையிட்டு பொலிஸாரை பயன்படுத்தி ஊடகங்களை அச்சுறுத்த முயல்கிறது எனவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.
தற்போதைய அரசு சுயாதீன ஊடகங்களுக்கு எதிராக மேற்கொள்ளும் அழுத்தங்கள் குறித்து சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிடும் போதே அவர் இவ்வாறு கருத்துத் தெரிவித்தார்.
ஒரு ஜனநாயக நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நான்கு முக்கியத் தூண்களாக நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை மற்றும் சுயாதீன ஊடகம் உள்ளன.
ஆனால் இப்போது அரசு பொலிஸாரை பயன்படுத்தி மக்களின் ஜனநாயக உரிமைகளையும், பொலிஸ் அதிகாரிகளின் உரிமைகளையும் மீறி வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
சுயாதீன ஊடகங்கள் தங்களது கருத்துகளை காரணங்கள், உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் முன்வைத்தாலும், அவற்றை ஒடுக்க முயல்வது ஒரு ஜனநாயக நாட்டை பொலிஸ் அரசாட்சியாக மாற்றும் முயற்சியாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பெரும்பான்மையின் குரல்
இந்த நாட்டின் “அமைதியான பெரும்பான்மையின் குரல்” சுயாதீன ஊடகமே என்பதால், அதனை ஒடுக்கக் கூடாது என்றும், ஊடக ஒடுக்குமுறை என்பது சர்வாதிகார ஆட்சிக்கான பாதையை திறப்பதாகும் எனவும் அவர் கூறினார்.

மக்கள் வழங்கிய ஆணை சர்வாதிகார ஆட்சியையோ, பொலிஸ் அரசாட்சியையோ உருவாக்குவதற்கல்ல எனவும், ஜனநாயக உரிமைகளை பறிக்க அரசு முயன்றால், அதற்கு எதிராக ஐக்கிய மக்கள்ச சக்தி கட்சி உறுதியாக குரல் கொடுக்கும் என்றும் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
மேலும், பொலிஸாரின் சுயாதீனத்திற்கே அழுத்தங்கள் ஏற்படுத்தப்படுவதால், அவர்கள் பக்கப்பாதுகாப்பில்லாமல் சேவை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது என்றும், அரசியல் தலையீடுகளின்றி பணியாற்ற முடியாத சூழல் நிலவுகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குத் தள்ளுவதாகும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையை வெளிப்படுத்தும் உரிமை ஊடகங்களுக்கு உள்ளதாகவும், அதற்கு தடையிடுவது 2.2 கோடி மக்களின் உரிமைகளை மீறும் செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அமைப்புகளின் வரவு செலவுத் திட்டங்கள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் உரிமையையும் தற்போது கட்டுப்படுத்தி வருவதாகவும், நீர்கொழும்பு மற்றும் ஹொரண பகுதிகளில் நடந்த சம்பவங்கள் அதற்கான உதாரணங்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்.

