நுவரெலியா மாவட்டம் தவலந்தன்னை பகுதியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (4) மாலை சுமார் 6 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தவலந்தன்னை பகுதியில் இருந்து பூண்டுலோயா நோக்கி பயணித்த பார ஊர்தியும், பூண்டுலோயா பகுதியில் இருந்து தவலந்தன்னை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிளும் கேந்திர விகாரை அருகிலுள்ள சாலையில் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் தொடர்பில் பார ஊர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


