சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்கள் அல்லது ஆடம்பர வாழ்க்கை வாழும் நபர்கள் குறித்த தகவல்களை பொதுமக்கள் வழங்குமாறு இலங்கை பொலிஸார் கடந்த ஜூலை 9ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) வலியுறுத்தியுள்ளது.
முறையான வழிகாட்டுதல்கள் இன்றி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால், குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு தேவையற்ற துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக கட்சி தெரிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தின் சுயாதீன விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள Statement of Common Purpose அடிப்படையில், சட்டத்தையும் பொது அமைதியையும் பாதுகாப்பதும், சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதும், சமூக அமைதியை பேணுவதும் பொலிஸாரின் பிரதான பொறுப்புகளாகும். ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு அந்த அடிப்படை கொள்கைக்கு முரணானதாக இருப்பதாக ஐ.தே.க. சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையில் சொத்து வரி (Wealth Tax) நடைமுறையில் இல்லாத நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டபூர்வமான வழிகளில் பலர் சொத்துக்களை ஈட்டுகின்றனர் என்றும், வரி முறைமை குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தால் சிலர் தங்களது சொத்துக்களை முறையாக வெளிப்படுத்தாமல் இருக்கக்கூடும் என்றும் கட்சி குறிப்பிட்டுள்ளது.
மேலும், தெளிவான சட்டபூர்வ வருமான ஆதாரம் இன்றி ஈட்டப்பட்ட சொத்துக்களை அடையாளம் காணும் நடைமுறைகள் அல்லது வழிகாட்டுதல்கள் இல்லாத சூழலில், இந்த அறிவிப்பு பொதுமக்களை துன்புறுத்தும் கருவியாக மாறக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து தெளிவான வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டியிருந்தது என்றும் ஐ.தே.க. தெரிவித்துள்ளது.
இதனால், தற்போதைய அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற்று, பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் தெளிவான சட்ட வழிகாட்டுதல்களுடன் புதிய அறிவிப்பொன்றை வெளியிடுமாறு ஐக்கிய தேசியக் கட்சி பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

