நாட்டில் தற்போது நிலவும் டெங்கு காய்ச்சல் பரவலால், கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தரும் சிறுவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, குழந்தைகளுக்கு விரைவாகவும் திறமையாகவும் மருத்துவ சேவைகளை வழங்க பெற்றோர்கள் மற்றும் பாதுகாப்பாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, குழந்தைகளை சிகிச்சைக்காக அல்லது மருத்துவ ஆலோசனைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து வரும் ஒவ்வொரு முறையும் பின்வரும் ஆவணங்களை கட்டாயமாகக் கொண்டு வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
தனிநபர் சுகாதார இலக்கம் (PHN) அல்லது பார்கோடு (Barcode) அட்டை
சிறுவர் சுகாதார வளர்ச்சிப் புத்தகம் அல்லது நிறை பதிவுப் புத்தகம்
மருந்துகள் அல்லது உணவு ஒவ்வாமை (Allergy) தொடர்பான மருத்துவ அறிக்கைகள்
மருத்துவ ஆலோசனைப் புத்தகங்கள் (Clinic Books)
வைத்தியசாலையிலிருந்து விடுவிக்கப்பட்ட அட்டைகள் (Discharge Cards) அல்லது நோய் கண்டறிதல் அட்டைகள் (Diagnosis Cards)
இந்த ஆவணங்களை கொண்டு வருவதன் மூலம் குழந்தைகளின் மருத்துவ வரலாற்றை விரைவாகப் பரிசீலித்து, தகுந்த சிகிச்சையை தாமதமின்றி வழங்க முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலதிக தகவல்களுக்கு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தை 011 2693711 (இணைப்பு 307) என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்புகொள்ளலாம்.

