இந்திய – இலங்கை ஆடைத் துறை வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட இலங்கை பிரதிநிதிகள் குழு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்திய அரசாங்கத்தின் விசேட அழைப்பின் பேரில் புதுடெல்லியில் நடைபெற்று வரும் பாரத் டெக்ஸ் சர்வதேச ஆடை வர்த்தகக் கண்காட்சியில் வைத்து அந்நாட்டு ஆடைத் துறை அமைச்சர் கிரிராஜ் சிங்கை சந்தித்து முக்கிய பேச்சுவார்த்தையிலும் அக்குழு ஈடுபட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேலும் பயனுள்ள வகையில் வலுப்படுத்துவது குறித்தும், இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடை ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்தும் விசேட அவதானம் செலுத்தப்பட்டது.
இந்திய ஆடைத்துறை அமைச்சர்
அத்துடன், கைத்தறித் துறையின் மேம்பாட்டிற்காக இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தை மையமாகக் கொண்டு வழங்கப்பட்ட இரண்டு வார கால விசேட பயிற்சித் திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கைத் தரப்பால் மனமார்ந்த நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், 2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இலங்கையில் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள பிரம்மாண்டமான ‘சர்வதேச கைத்தொழில் கண்காட்சி 2027’ நிகழ்வில் பங்கேற்குமாறு இந்திய ஆடைத்துறை அமைச்சர் உள்ளிட்ட அந்நாட்டின் முன்னணி வர்த்தக முயற்சியாளர்களுக்கு இதன்போது உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டதுடன், இலங்கையிலுள்ள முதலீட்டு ஊக்குவிப்புகள் மற்றும் திறமையான மனிதவளத்தின் ஆற்றல்கள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இப்பேச்சுவார்த்தையில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹீஷினி கொலன்னே உட்பட இரு நாடுகளினதும் உயர்மட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Source: https://ibctamil.com/article/develop-of-the-indian-sri-lankan-garment-industry-1784177920

