நாடளாவிய ரீதியில் உள்ள கிராம உத்தியோகத்தர்கள் தமது பயணக் கொடுப்பனவை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (10) முதல் நாளை (11) வரை இரு நாள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இதன்படி, திருகோணமலை – மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களும் குறித்த தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்து சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் காரணமாக கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த பொதுமக்கள், சேவைகளைப் பெற முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
இதேவேளை கிராம உத்தியோகத்தர்கள் இன்று (10) நாடளாவிய ரீதியில் முன்னெடுத்த சுகயீன விடுமுறைப் போராட்டம் காரணமாக, கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு சேவைகளைப் பெற்றுக்கொள்ள வந்த பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இன்று திங்கட்கிழமை பொதுமக்கள் தினமாக இருப்பதால், கிராம உத்தியோகத்தர்களின் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு 10 முதல் 15 கிலோமீற்றர் தொலைவிலுள்ள பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வருகை தந்திருந்தனர்.
எனினும், கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், அவர்களுடன் தொடர்புடைய எந்தவொரு சேவையும் இடம்பெறவில்லை. இதனால், தூரப் பகுதிகளில் இருந்து அதிகளவு பணம் செலவிட்டு போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொண்டு வந்த பொதுமக்கள், ஏமாற்றத்துடனும் அதிருப்தியுடனும் வீடு திரும்பினர்.
குறிப்பாக, சிலர் ஆட்டோ உள்ளிட்ட வாடகை வாகனங்களுக்கு அதிக பணம் செலுத்தி பிரதேச செயலகத்துக்கு வந்ததாகவும், போக்குவரத்துக்காக கடன் பெற்றே வந்ததாகவும் தெரிவித்து தமது கவலையை வெளிப்படுத்தினர்.






