வடக்கு மாகாணத்தின் மக்கள் தேவைகளை திறம்பட நிறைவேற்றுவதற்கு மாகாண நிர்வாகத்தின் ஒவ்வொரு அங்கமும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் செயற்பட வேண்டும். தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்பு மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு இடமளிக்காமல், அனைவரும் மக்களுக்காக ஒரே அணியாகச் செயற்பட வேண்டும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் ஆளணி மற்றும் பயிற்சிப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிர்வாகச் சட்டம் தொடர்பான பயிற்சிப் பட்டறை இன்று (18.08.2026) செவ்வாய்க்கிழமை கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் நா.வேதநாயகன் உரையாற்றினார்.
நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், மாகாண நிர்வாகத்தின் கட்டமைப்பு அபிவிருத்தி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் வரவு–செலவுத் திட்ட முகாமைத்துவம் போன்ற பல விடயங்கள் முக்கியமானவையாக இருந்தாலும், அவற்றைச் சரியாக முன்னெடுப்பதற்கான அடிப்படை சட்டத்தின் ஆட்சி எனக் குறிப்பிட்டார். சட்டத்தை மதித்து, உரிய நடைமுறைகளைப் பின்பற்றி, பொறுப்புடன் தீர்மானங்களை மேற்கொள்ளும் நிர்வாகக் கலாசாரமே ஒரு வலுவான நிர்வாகத்தின் அடித்தளம் என்றார்.
நிறைவேற்று அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள தீர்மான அதிகாரங்கள் ஒருவரின் வாழ்க்கையையும், நிறுவனங்களின் செயற்பாடுகளையும், சில சந்தர்ப்பங்களில் ஒரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியவை என்பதால், அதிகாரம் என்பது உரிமை மட்டுமல்ல் அது பொறுப்பும் ஆகும் என ஆளுநர் வலியுறுத்தினார். நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், ஒழுக்காற்று நடவடிக்கை உள்ளிட்ட ஒவ்வொரு நிர்வாகத் தீர்மானமும் சட்டரீதியாகவும் நியாயமாகவும் அமைய வேண்டும் என்றார்.
அண்மைக்கால சில செயற்பாடுகள் ஊடாக மாகாண நிர்வாக இயந்திரத்தின் சுமுகமான இயக்கத்தை குழப்புவதற்கான சில முயற்சிகள் இடம்பெறுகின்றன என்ற உணர்வு தமக்கு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஆளுநர், மாகாண நிர்வாகம் ஒரே ஒரு சில்லால் இயங்குவதில்லை எனத் தெரிவித்தார். நிறைவேற்று அதிகாரிகள் ஒரு சில்லாகவும், நிர்வாக அதிகாரிகள் மற்றொரு சில்லாகவும், ஒவ்வொரு உத்தியோகத்தரும் ஒவ்வொரு நிறுவனமும் நிர்வாக இயந்திரத்தின் தனித்தனி சில்லுகளாக இருப்பதாக அவர் விளக்கினார்.
இந்தச் சில்லுகள் அனைத்தும் ஒரே திசையிலும் ஒரே நோக்கத்துடனும் இயங்கும்போதுதான் மாகாண நிர்வாக இயந்திரம் தடையின்றி இயங்கும் என்றும், அவற்றுக்கிடையில் உரசல்கள் ஏற்படும்போது நிர்வாகத்தின் வேகம் குறைவதுடன், சில சந்தர்ப்பங்களில் முழு நிர்வாக இயந்திரமே பாதிக்கப்படும் என்றும் ஆளுநர் குறிப்பிட்டார். எனவே, தனிப்பட்ட கருத்து வேறுபாடுகள், தன்முனைப்புகள் மற்றும் அதிகாரப் போட்டிகளுக்கு நிர்வாகக் கட்டமைப்புக்குள் இடமளிக்காமல், ஒருவருக்கொருவர் எதிராக அல்ல, மக்களுக்காக ஒன்றாகப் பணியாற்றும் ஒரே அணியாக அனைத்து உத்தியோகத்தர்களும் செயற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒரு நிர்வாகத் தீர்மானம் பின்னர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலோ நீதிமன்றத்திலோ சவாலுக்குள்ளாகக்கூடிய நிலையில், ஒவ்வொரு அதிகாரியும் ஒரு தீர்மானத்தை மேற்கொள்ளும் முன் ‘இது சட்டரீதியாக நிலைத்திருக்குமா? நாளை நீதிமன்றத்தின் முன் இதனை விளக்க முடியுமா? இயற்கை நீதிக்கும் நியாயத்துக்கும் இது அமைவாக உள்ளதா?’ என்ற கேள்விகளைத் தம்மிடமே எழுப்பிக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மைக் காலங்களில் தேவையான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகள் முழுமையாகப் பின்பற்றப்படாத சில நடவடிக்கைகள் காரணமாக அவற்றை இடைநிறுத்த வேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார். சட்டபூர்வமான அடிப்படை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத நிலையில் எந்தவொரு நடவடிக்கையையும் தொடர்வது சரியான நிர்வாகமாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சட்டத்தைப் பின்பற்ற வேண்டிய இடத்தில் தேவையற்ற அச்சத்தால் தீர்மானங்களைத் தாமதப்படுத்துவதும், பொறுப்பை அடுத்த நிலை அதிகாரியிடம் தள்ளிவிடுவதும் நல்ல நிர்வாகத்தின் அடையாளமல்ல எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதிகாரத்தை சட்டத்தின் வரம்புக்குள் துணிச்சலுடனும் நியாயத்துடனும் பொறுப்புணர்வுடனும் பயன்படுத்த வேண்டும் என்றார்.
சட்டரீதியாக வலுவான நிர்வாகத்தின் இறுதிப் பயனாளிகள் அதிகாரிகள் அல்ல, பொதுமக்களே எனவும் ஆளுநர் குறிப்பிட்டார். வெளிப்படையானதும் நியாயமானதுமான நிர்வாகத் தீர்மானங்கள் பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதுடன், தேவையற்ற வழக்குகள், முறைப்பாடுகள் மற்றும் நிர்வாகத் தாமதங்களைக் குறைத்து, நேரமும் பொது நிதியும் மீண்டும் மக்களின் அபிவிருத்தி மற்றும் நலனுக்காகப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கும் என்றார்.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், ஆளணியும் மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், மாகாண அபிவிருத்தி பயிற்சி அலகின் பணிப்பாளர் மற்றும் மாகாண நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

