இலங்கையில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவரப்பட்டபோது, அதற்கு எதிராக 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் நோக்கில் 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நீதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் தமிழரசுக் கட்சி அவசரப்பட்டு எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சிறிதரன் எம்.பி.,
22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளின் விசாரணைகள் எந்த நிலைக்கு செல்லவுள்ளன என்பதை தமிழரசுக் கட்சி மிகுந்த அவதானத்துடன் கண்காணித்து வருவதாகத் தெரிவித்தார்.
கடந்த வாரம் Zoom ஊடாக கட்சியின் உயர்மட்டக் குழுவினரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது தொடர்பில் கலந்துரையாடியதாகவும், அந்தக் கலந்துரையாடலின் அடிப்படையில் திருத்தம் தொடர்பில் அவசரப்பட்டு எந்தவொரு கருத்தையோ அல்லது தீர்மானத்தையோ வெளியிடுவதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
குறிப்பாக, எந்த நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்க அரசாங்கம் முன்மொழிகிறதோ, அதே நீதிபதிகளே இந்த வழக்குகள் தொடர்பான தீர்ப்புகளையும் வழங்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, பொறுமையுடன் காத்திருந்து நீதிமன்றத் தீர்ப்புகளை அவதானிப்பதுடன், மக்களின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னரே 22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் கட்சியின் இறுதி நிலைப்பாடு தீர்மானிக்கப்படும் என சிறிதரன் எம்.பி. தெரிவித்தார்.
அதுவரை இந்த விவகாரத்தில் பொறுத்திருப்பதே தமிழரசுக் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Source: https://samugammedia.com/22nd-amendment-final-stance-only-after-court-verdict–sitaran-mp-1787395603

