கற்பிட்டி கோட்டைக்கு அருகில் அமைந்துள்ள துறைமுகப் பகுதியை அண்மித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட பொலிஸ் சோதனை நடவடிக்கையின்போது, சுமார் 200 புறாக்களுடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புத்தளம் வலயத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் வழிகாட்டலின் கீழ், விசேட பொலிஸ் குழுவினரால் இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் குறித்த புறாக்கள், பணப் பந்தயம் இடம்பெறும் புறாப் பந்தயங்களுக்காக பயன்படுத்துவதற்கு தயார்படுத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், புறாக்களை கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் படகு, அதன் எஞ்சின் மற்றும் சிற்றூர்தி ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட நால்வரில் ஒருவர் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்தவர் எனவும், ஏனைய மூவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட புறாக்களில் ஒன்றின் பெறுமதி சுமார் 50,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், அனைத்து புறாக்களின் மொத்தப் பெறுமதி சுமார் ஒரு கோடி ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

