அரசமைப்பின் 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையை நிறைவேற்றுத்துறையின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்தி, அதன் சுதந்திரத்துக்கு அரசு மரண அடி கொடுத்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
மாத்தளை மாவட்டம், லக்கல தேர்தல் தொகுதி ஐக்கிய மகளிர் சக்தியைத் தாபிக்கும் கூட்டம் நேற்று நாவுல நகரில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
ஜனநாயகத்துக்கான வெளியை இந்த அரசு இல்லாமல் செய்துள்ளது. 22ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறையின் சுதந்திரத்துக்கு மரண அடி கொடுத்து, நிறைவேற்றுத்துறையின் அதிகாரங்களைப் பலப்படுத்திக்கொண்டு, நீதித்துறையை ஜனாதிபதியின் அடிமைத்தனத்துக்கு உட்படுத்த அரசு முயற்சிக்கின்றது. இது 220 இலட்சம் மக்களின் ஜனநாயக உரிமைக்குப் பாரிய சவால்களை விடுகின்றது.
இந்த அரச தரப்பினர் பேச்சுரிமை, ஒன்று கூடும் உரிமை, தாம் விசுவாசம் கொள்ளும் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் போன்றவற்றை இல்லாமல் செய்து, நாட்டை ஜே.வி.பியின் சர்வாதிகார ஆட்சிக்குக் கொண்டு செல்ல முற்படுகின்றனர்.
இந்த அரசமைப்புத் திருத்தத்தின் ஊடாக நிறைவேற்றுத்துறை நீதித்துறையில் தாக்கம் செலுத்துகின்றது என வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நினைத்தால், நாட்டுக்கு வரவிருக்கும் முதலீடுகளும் இல்லாது போய்விடும். தற்போதும் கூட அரசால் பாரிய அளவிலான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியாமல் போயுள்ளதை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும்
தேர்தல் காலத்தில் பல கூட்டங்களை நடத்தி மக்களுக்கு வெற்றுப் பொய் வாக்குறுதிகளை வழங்கி, தற்போது 2 வருட நிறைவைக் கொண்டாடும் இந்த அரசு, மேலும் பல கூட்டத் தொடர்களை நடத்தி அந்தப் பொய்களை உறுதிப்படுத்திக்கொண்டு செல்கின்றது.
இந்த அடக்குமுறைசார், ஏதேச்சதிகாரம் சார்ந்த அரசை நாம் தோற்கடிக்க வேண்டும். விவசாயிகள், மீனவர்கள் என 220 இலட்சம் மக்களையும், மக்களின் நலன்களையும் பாதுகாக்கும் அரசைக் கொண்டுவர வேண்டும்.
தற்போதைய அரசின் பொய் உரைக்கும் கூட்டங்களுக்கு ஏமாந்து நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் அநாதரவாகியுள்ளனர். வயல் நிலங்கள் செழிப்படையும், தொழிற்சாலைகள் உருவாகும் யுகம் முடிவடைந்து, தொழிற்சாலைகள் நாட்டை விட்டுச் செல்லும் யுகமே இன்று உருவாக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்கனவே அமைந்திருக்கும் வெளிநாட்டு முதலீடுகளைப் பாதுகாத்துக்கொள்ள முடியாத அரசாக இது காணப்படுகின்றது. முறைமையில் மாற்றத்துக்காகப் புள்ளடி இட்ட மக்களுக்கு மேற்பார்வைக்கு மாத்திரம் சில விடயங்களைக் காட்டிவிட்டு, உண்மையான மாற்றத்துக்கான நடவடிக்கைகளை எடுக்காமல் தடம்மாறிச் செல்கின்றனர்.
அரசுக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாமல் போயுள்ளது. வாக்குறுதியளித்தபடி ‘விட்ஸ்’ ரக கார் கிடைத்தபாடில்லை, 33 வீதத்தால் மின்சாரக் கட்டணம் குறைந்தபாடில்லை, துறைமுகத்தில் இறக்கப்படும் விலைக்கு எண்ணெய் கிடைத்தபாடில்லை. அஸ்வெசும பயனாளர்கள் கூட இன்று பட்டியல்களிலிருந்து வெட்டப்படுகின்றார்கள்.
மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்களும் துண்டிக்கப்படுகின்றன. இவ்வாறானதொரு நிலையில், ஒருவருக்கு ஒரு மாதத்துக்கு 17 ஆயிரத்து 315 ரூபாவை வைத்துக்கொண்டு 30 நாள்களுக்கு வாழ முடியும் என அரசு கூறுவது வேடிக்கையானது என்றார்.

