கொழும்பு உள்ளிட்ட புறநகர்ப் பகுதிகளில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு போதைப் பொருட்களை விநியோகிக்கும் வலையமைப்பில் ஈடுபட்ட 5 பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்ட கும்பலைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுமார் 25 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் குறித்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளதாக நுகேகொட பிரிவின் ஊழல் எதிர்ப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் ஐவர் நேற்று (24) போதைப்பொருள் முத்திரைகள், போதைப்பொருள், குஷ் போதைப்பொருட்கள் மற்றும் சிறிய எடையை அளவிடுவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு சிறிய தராசுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணை
பல்கலைக்கழக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடும் 5 பேர் கொண்ட கும்பல் இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மாலபே தனியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் போதைப்பொருள் முத்திரைகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணையின் போது, இந்த மோசடி கும்பல் குறித்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அவர்கள் மறைத்து வைத்திருந்த போதைப்பொருளுடன் எஞ்சிய நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதாக நுகேகொட பிரிவு ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.