யாழ்ப்பாணம், நல்லூரில் உள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த அவரது சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய பொலிஸாரின் அடாவடித்தனத்தைக் கண்டித்தும், தமிழ் மக்களின் நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தியும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் 8 மாவட்டங்களிலும் இன்று திங்கட்கிழமை மாபெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டின் இந்தப் போராட்டங்கள் இடம்பெற்றன.
இதற்கமைய, யாழ்ப்பாணம் நல்லூரில் உள்ள தியாகி திலீபன் நினைவாலயம் முன்பாக இன்று பிற்பகல் மாபெரும் கண்டனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பல்வேறு கண்டன வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கோஷங்களை எழுப்பினர்.
குறிப்பாக, “தியாகி திலீபன் தமிழினத்தின் அடையாளம்”, “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் – பார்த்தீபன் கனவு பலிக்கட்டும்”, “இனப்படுகொலை புரிந்த இராணுவத்துக்குச் சிலை; தமிழினத்தின் தியாகிக்குச் சிலை இல்லையா?”, “தியாகி திலீபனின் சிலையை உடனே மீள நிறுவு”, “தலைமுறை கடந்தும் என்றும் வரலாறாய் வாழ்பவன் திலீபன்”, “அநுர அரசே, உன்னுடைய இரட்டை வேடம் அம்பலம்” உள்ளிட்ட பல கோஷங்களை எழுப்பி அவர்கள் தமது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வடக்கு, கிழக்கில் எழுந்துள்ள இந்த எதிர்ப்பலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

