தனது அரசாங்கத்தின் முதல் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை அமைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டியொன்றை நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று (17) இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பேரணியில் உரையாற்றும் போது ஜனாதிபதி மேற்கண்ட விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூரியவுடனான சமீபத்திய சந்திப்பின் போது இந்த யோசனை எழுப்பப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் நோக்கம்
“என்ன செய்ய வேண்டும் என்று சனத் ஜெயசூரிய என்னிடம் கேட்டபோது, எங்கள் முதல் ஐந்து ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டவும், ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியை நடத்தவும் நிச்சயமாக முயற்சிக்க வேண்டும் என்று நான் அவரிடம் சொன்னேன்” என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாணத்தில் ஒரு சர்வதேச மைதானத்தை கட்டுவதும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் வீரர்களை ஒன்றாகக் காண்பதும் தனது தொலைநோக்குப் பார்வையில் அடங்கும் ஜனாதிபதி அநுர தெரிவித்துள்ளார்.
மண்டைத்தீவில் மைதானம்
சமீபத்தில் விளையாட்டுத் துறை அமைச்சர் சுனில் கமகேவுடன் சேர்ந்து சனத் ஜெயசூரிய மண்டைத்தீவில் முன்மொழியப்பட்ட இடத்தை ஆய்வு செய்ய யாழ்ப்பாணத்திற்குச் சென்றார்.

நிலம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ளது, மைதானம் அமைப்பதற்கான நிதியைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதன்படி, இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரதமரிடம் ஆதரவு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கு மாகாணத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டத்திற்கு இலங்கை கிரிக்கெட்டும் ஆதரவளிக்கும் என்றும் அமைச்சர் கமகே உறுதியளித்துள்ளார்.

