வடமேற்கு கொங்கோவில்(Congo) ஒரு படகு தீப்பிடித்து கவிழ்ந்ததில் குறைந்தது 50 பேர் உயிரிழந்ததாகவும், நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாகவும் அந்நாட்டின் உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வடமேற்கு கொங்கோவில் உள்ள மடான் குமு துறைமுகத்தில் இருந்து போலோம்பா பகுதிக்கு ஒரு மோட்டார் படகில் 400க்கும் மேற்பட்டோர் பயணம் மேற்கொண்டனர்.
பயங்கர தீ விபத்து
பன்டாக்கா பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. படகில் பயணம் செய்தவர்கள் தீ விபத்தில் இருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தனர். இதில் படகு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அடங்குவர். சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் நீண்ட நேரம் போராடி 100க்கும் மேற்பட்டவர்களை லேசான காயத்துடன் மீட்டனர்.
காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. படகில் பெண் ஒருவர் சமையல் செய்த போது தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.