இந்தியாவில் இருந்து கடந்த 18 வருடங்களின் பின்னர் கடல் மார்க்கமாக தலைமன்னார் பகுதிக்கு படகில் வருகை தந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் கடுமையாக தாக்கிய நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு உடையார் கட்டு பகுதியைச் சேர்ந்த தங்கையா டேவிட் பாலேந்திரன் என்ற இளம் குடும்பஸ்தர் 2007 ஆம் ஆண்டில் தனது 18 வது வயதில் கடல் மார்க்கமாக இந்தியா சென்றுள்ளார்.
அதனைதொடர்ந்து, கடந்த 18 வருடங்களாக இந்தியாவில் வசித்து வந்த நிலையில் மீண்டும் தாயகம் திரும்ப முயற்சித்துள்ளார்.
கண்மூடித்தனமான தாக்குதல்
இந்த நிலையில், கடந்த 22 ஆம் திகதி இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக படகு ஒன்றில் தலைமன்னார் பகுதியை நோக்கி வந்துள்ளார்.

இதன்போது, தலைமன்னார் கடற்படையினரால் குறித்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
40 வயதுடைய குறித்த குடும்பஸ்தருக்கு இதய நோய் காணப்படுகின்ற நிலையில் அதற்கான மருத்துவ அறிக்கைகளையும் தன் வசம் எடுத்து வந்துள்ளார்.
எனினும், தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்ற கடற்படையினர், நோயாளியான குறித்த குடும்பஸ்தரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.
விளக்கமறியல் உத்தரவு
அதனைதொடர்ந்து அவரை கடற்படையினர் தலைமன்னார் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததையடுத்து, தலை மன்னார் காவல்துறையினர் குறித்த வைத்தியசாலையில் அனுமதிதுள்ளனர்.

பின்னர் அவரை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்ட பதில் நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில், மன்னார் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதய நோயாளியான தன்னை அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் காண்பித்த போதும் கடற்படையினர் கடுமையாக தாக்கியதாக உறவினர்கள் மற்றும் வைத்தியர்களிடம் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

