சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது என்றும், ஜனாதிபதி எந்த சட்டத்திற்கு அமைவாக சட்டமா அதிபரை விசாரித்தார் எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கேள்வி கேட்கும் சட்ட புலமை ஜனாதிபதிக்கு உள்ளதா எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் வழக்கு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கம்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
லசந்த விக்கிரமதுங்க
லசந்த விக்கிரமதுங்கவின் வழக்கில் சந்தேக நபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த மூவரை வழக்கில் இருந்து விடுவிக்க சட்டமா அதிபர் எடுத்த தீர்மானம் தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பில் ஜனாதிபதி, சட்டமா அதிபரை அழைத்து கடுமையாக பேசியதாகவும், பொறுப்பை நிறைவேற்ற முடியாவிடின் பதவியில் இருந்து பயனில்லை என்று குறிப்பிட்டதாகவும் அரசாங்கத்துக்கு இணக்கமான ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.
சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை கேள்விக்குள்ளாக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடையாது.
சட்டமா அதிபர் பிரதம நீதியரசருக்கு அடுத்த படியான பதவி நிலையில் உள்ளவர். ஆகவே சட்டமா அதிபரின் நிலைப்பாட்டை நாட்டு மக்கள் உட்பட எவரும் உயர்நீதிமன்றத்தின் ஊடாகவே சவாலுக்குட்படுத்த முடியும்.
சட்டமா அதிபர்
சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்தில் மாத்திரமே சவாலுக்குட்படுத்த முடியும்.
லசந்த விக்கிரமதுங்கவின் வழக்கு விவகாரத்தில் சட்டமா அதிபரின் நிலைப்பாட்டுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
சட்டமா அதிபரும் மனிதரே. இவ்வாறான அசாதாரன செயற்பாடுகளினால் அவர் அச்சமடைந்தால் சட்டத்தின் ஆட்சி மலினப்படுத்தப்படும்” என்றார்.