கண்டியில் அனர்த்தம் காரணமாக வீடொன்றில் சிக்கியிருந்த குழந்தை ஒன்று சிறப்பு படையினரால் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மீமுர பகுதியில் வீட்டில் சிக்கியிருந்த மூன்று மாதக் குழந்தையை மீட்டு, அவரது தாயாரிடம் ஒப்படைக்க சிறப்பு கொமாண்டோ நடவடிக்கையை முன்னெடுத்தது.
குழந்தையை மீட்க இராணுவத்தின் 2வது கமாண்டோ படைப்பிரிவைச் சேர்ந்த 8 பேர் கொண்ட குழு களத்தில் இறங்கியது.
அதிரடியாக மீட்ட சிறப்பு கொமாண்டோ
கடந்த 3 ஆம் திகதி கரம்பகெட்டிய கிராமத்தில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட இராணுவத்தினர், வீட்டில் 3 மாதக் குழந்தையுடன் பாட்டி தனியாக இருப்பதை கண்டனர்.

அவரது தாயார் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் அனர்த்தம் காரணமாக வேறு பகுதியில் சிக்கியிருந்தார்.
வெள்ளம் காரணமாக வீடு திரும்ப முடியவில்லை.
இந்நிலையில் கடும் மழையிலும் தாய்ப்பால் இல்லாமல் பலவீனமாக இருந்த குழந்தையையும் அவரது பாட்டியையும் இராணுவத்தினர் காப்பாற்றியுள்ளனர்.
தாயாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை
மீட்கப்பட்ட இருவரும் விமானம் மூலம் இராணுவ முகாமுக்குக் கொண்டு சென்று, பாதுகாப்பாக தனது தாயாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாய் வேறொரு இடத்தில் சிக்கியிருந்த நிலையில் அவரை கண்டுபிடிக்கும் வரையில், குழந்தை இராணுவ முகாமில் பாதுகாப்பாக பாட்டியுடன் தங்க வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாய் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இன்றையதினம் குழந்தையை அவரிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




