இந்தியா, இலங்கை மற்றும் மத்திய கிழக்கு வழியாக பங்களாதேஸ் நாட்டினரை ஐரோப்பிய
நாடுகளுக்கு அனுப்புவதற்கான, பாரிய மனித கடத்தல் மோசடியை, இலங்கையின் குடிவரவு
மற்றும் குடியகல்வுத் திணைக்களம் முறியடித்துள்ளது.
இதன்போது 10 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தகவல் ஒன்றின் பேரில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின்
புலனாய்வுப் பிரிவு மினுவங்கொடையில் உள்ள ஒரு விருந்தினர் விடுதியில் சோதனை
நடத்தியது.
சுற்றுலா விசாக்கள்
இதன்போது அங்கு பத்து பங்களாதேஸ் நாட்டினர் தங்கள் சுற்றுலா விசாக்களைத்
தாண்டி நாட்டில் தங்கியிருப்பது கண்டறியப்பட்டது.

இந்தக் குழுவினர், 2025ஆம் ஆண்டு பெப்ரவரி ஆரம்பத்தில் 30 நாட்கள் வருகை விசா மூலம்
நாட்டிற்குள் நுழைந்து, அவர்களின் விசாக்கள் காலாவதியாகி 15 நாட்களுக்குப்
பிறகும் நாட்டில் தங்கியிருந்துள்ளனர்.
இந்தக் குழுவில் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண்களும் அடங்கியுள்ளனர்
முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், இந்தக் குழுவினர், இந்தியாவில் இருந்து
வந்ததாகவும், துபாய்க்குச் சென்று பின்னர் ஐரோப்பாவிற்குச் செல்ல
திட்டமிட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பங்களாதேஸில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை, இந்தியா, இலங்கை மற்றும் துபாய்
போன்ற அண்டை நாடுகள் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு, அந்த நாட்டின் குடிமக்களை
பெருமளவில் வெளியேற வழிவகுத்துள்ளது.

