வெளிநாடு சென்றுள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொதுத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக விரைவில் நாடு திரும்புவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
பசில் ராஜபக்ஷ வைத்திய பரிசோதனையின் காரணமாகவே வெளிநாடு சென்றுள்ளதாக கட்சியின் செயலாளர் நாயகம் சட்டத்தரணி சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷ தனது மருத்துவ பரிசோதனைகளுக்காக சில வாரங்களுக்கு முன்னர் வெளிநாடு செல்லவிருந்தார்.
பசிலின் முடிவு
ஆனால், கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் நடவடிக்கைகளுக்காக இறுதித் தருணம் வரை இரவு பகலாக உழைத்தார். தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில் வெளிநாடு செல்வதாக கட்சியினரிடம் தெரிவித்திருந்தார்.
மருத்துவ பரிசோதனைகளின் பின்னர், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு தலைமை தாங்க அமைச்சர் பசில் ராஜபக்ஷ விரைவில் வருவார் என குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு பயணம்
இதேவேளை, நாமல் ராஜபக்சவின் இரண்டு பிள்ளைகளும் தனது அத்தை மற்றும் மாமனாருடன் வெளிநாடு சென்றுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை கதிர்காமம் சமய நிகழ்வுகளில் நாமல் ராஜபக்ஷ தனது குடும்ப உறுப்பினர்களுடன் கலந்து கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.