மட்டக்களப்பு நகரில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின்
ஏற்பாட்டில் நீதி கோரிய கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று காலை
முன்னெடுக்கப்பட்டது.
செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரியும் தமிழ் மக்களுக்கு எதிராக
முன்னெடுக்கப்படும் விரோத செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு
காந்திபூங்காவில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவிடத்திற்கு
முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
சாணக்கியன் தலைமையில் போராட்டம்
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட கிளையின் தலைவரும் நாடாளுமன்ற
உறுப்பினருமான இரா.சாணக்கியன் தலைமையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில், மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், இ.சிறிநாத் ஆகியோரும்
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர்
தினேஸ், தவிசாளர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், பிரதேசசபை உறுப்பினர்கள், முன்னாள்
மாநகரசபை முதல்வர் தி.சரவணபவன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்
பிரசன்னா இந்திரகுமார் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, சர்வதேச நீதிவிசாரணை வேண்டும், இராணுவமே வெளியேறு, சத்துருக்கொண்டான்
படுகொலைக்கு நீதி வேண்டும், சர்வதேசமே எங்களுக்கு நீதியைப் பெற்றுத்தா, தமிழர்
தாயகம் தமிழர்களுடையது, செம்மணி படுகொலைக்கு சர்வதேச நீதிவேண்டும், முல்லைத்தீவு
இளைஞன் படுகொலைக்கு நீதிவேண்டும் போன்ற பல்வேறு கோசங்கள் இதன்போது
எழுப்பப்பட்டன.
பலத்த பாதுகாப்பு
இதேவேளை, இன்று மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் பொது மக்கள்
பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தலைமையில் பாதுகாப்பு தொடர்பாக
இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையில் பாதுகாப்பு அமைச்சரின் மட்டக்களப்பு விஜயத்தின் காரணமாக, மட்டக்களப்பு நகர் பகுதி மற்றும் காந்திபூங்கா, அபிவிருத்திக் குழுக் கூட்டம் இடம்பெறும் பழைய கச்சேரி ஆகிய பிரதேசங்களில் விசேட
அதிரடிப்படை மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
முக்கிய சந்திகளில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை பலத்த பாதுகாப்பக்கு மத்தியில் நீதி கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் – பவன்