பிரித்தானியாவில் முனைவர் பட்டம் பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த விசா ஊதியச் சலுகைகளை நீக்குமாறு அந்நாட்டு அரசாங்கத்தின் இடம்பெயர்வு ஆலோசனைக் குழு (Migration Advisory Committee – MAC) பரிந்துரையை முன்வைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது ‘திறமையான பணியாளர் விசா’ பிரிவின் கீழ், முனைவர் பட்டதாரிகள் மற்ற பணியாளர்களை விடக் குறைந்த ஊதியத்தில் பணிபுரிய அனுமதிக்கும் ‘சம்பள தள்ளுபடி’ விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில் இதனை நீக்க வேண்டும் என்று அந்த குழு தெரிவித்துள்ளது.
முனைவர் பட்டம் பெற்றவர்கள் மற்ற திறமையான தொழிலாளர்களை விடக் குறைந்த சம்பளம் பெறுகிறார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், எனவே இந்தச் சலுகை தேவையற்றது என்றும் ஆலோசனைக் குழு தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
உயர் கல்வி கற்ற பட்டதாரிகள்
விசா முறையை எளிமைப்படுத்தவும், திறமையான தொழிலாளர்களுக்கு நியாயமான மற்றும் சமமான ஊதியத்தை உறுதிப்படுத்தவும் இந்த மாற்றம் அவசியம் எனக் கருதப்படுகிறது.

பிரித்தானியாவிற்கு வரும் உயர் கல்வி கற்ற பட்டதாரிகள், நீண்ட காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிப்பை வழங்குவார்கள் என்பதை இந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இந்தக் குழுவின் பரிந்துரைகளைப் பிரித்தானிய அரசாங்கம் ஏற்கும் பட்சத்தில், அந்நாட்டின் விசா கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்படும்.
இது அங்குப் பணிபுரிய விரும்பும் சர்வதேச முனைவர் பட்டதாரிகள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

