“சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் மீள் எழுச்சிக்காக ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் நாளைய தினம் (08) தென்மராட்சி பூராகவும் இடம்பெறவுள்ள பூரண கடையடைப்பிற்கும், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை முன்பாக இடம்பெறுகின்ற கண்டன எதிர்ப்பு போராட்டத்திற்கும் தென்மராட்சி சமூக பொது அமைப்புகளின் ஒன்றியம் பூரண ஆதரவை கூட்டாக வழங்குகின்றது.
குறித்த போராட்டத்தில் எமது சமூக பொது அமைப்புகளின் அங்கத்தவர்கள் அனைவரும் முழுமையாக பங்கெடுப்பார்கள் என தென்மராட்சியில் இயங்குகின்ற சமூக, பொது அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ”கடந்த காலங்களில் எமது மண்ணில் இடம்பெற்ற அனைத்து போராட்டங்களுக்கும் தென்மராட்சியில் உள்ள ஒவ்வொரு சமூக மற்றும் பொது அமைப்புகள் அனைத்தும் தனித்தனியாகவே எமது ஆதரவை தெரிவிப்பது வழமை.
மக்கள் ஆதரவு
ஆனால் நாளை முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமானது மனிதாபிமானத்தையும் எமது மக்கள் அனைவரினதும் இலவச சிகிச்சை உரிமையையும் வலியுறுத்தி முன்னெடுக்கப்படுவதால் தென்மராட்சியில் உள்ள அனைத்து சமூக பொது அமைப்புகள் ஆகிய நாம் அனைவரும் ஒன்றிணைந்து கூட்டாக ஆதரவு அறிக்கையை வெளியிடுகின்றோம் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றோம்.
எனவே தென்மராட்சியில் உள்ள சிறிய வியாபாரிகள் முதல் பாரிய வர்த்தகர்கள் மற்றும் அனைத்து தொழில் அமைப்புகளும் பூரண பங்களிப்பை வழங்குவோம் என்பதை உரிமையோடு தெரிவித்துக் கொள்கின்றோம்“ என அவர்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
30 அமைப்புகள் ஆதரவு
அந்தவகையில் சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் கழகம், கொடிகாமம் வர்த்தக சங்கம், தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தென்மராட்சி, முச்சக்கரவண்டிச் சங்கம் சாவகச்சேரி, முச்சக்கர வண்டிச் சங்கம் கொடிகாமம், முச்சக்கர வண்டிச் சங்கம் கைதடி, தனியார் கல்வி நிலையங்களின் ஒன்றியம் தென்மராட்சி, கடற்றொழில் சங்கம் கச்சாய், லிகோரியார் கடற்றொழில் சங்கம் சாவகச்சேரி, சிகையலங்கரிப்பாளர் சங்கம் தென்மராட்சி, சலவைத் தொழிலாளர் சமாசம் தென்மராட்சி, சனசமூக நிலையங்களின் ஒன்றியம் தென்மராட்சி, கிராம அபிவிருத்திச் சங்கங்களின் சமாசம் தென்மராட்சி, மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் ஒன்றியம், பனை,தென்னை கூட்டுறவுச் சங்க தொழிலாளர்களின் சமாசம், கமக்காரர் அமைப்புக்களின் ஒன்றியம் தென்மராட்சி, சிறுதொழில் முயற்சியாளர் ஒன்றியம் தென்மராட்சி, குடிசைக் கைத்தொழில் மேம்பாட்டு இணையம் தென்மராட்சி, சந்தை வியாபாரிகள் சங்கம் சாவகச்சேரி, சந்தை வியாபாரிகள் சங்கம் கொடிகாமம், நகர வரியிறுப்பாளர் ஒன்றியம் சாவகச்சேரி, மீன் சந்தை வியாபாரிகள் ஒன்றியம் சாவகச்சேரி, மின்னியலாளர் சமாசம் சாவகச்சேரி, இளைஞர் கழகங்களின் சம்மேளனம் தென்மராட்சி, விளையாட்டுக் கழகங்களின் சமாசம் தென்மராட்சி, கால்நடை வளர்ப்பாளர் கூட்டுறவுறவுச் சங்கம் தென்மராட்சி, தனியார் பேக்கரி உற்பத்தியாளர் சங்கம் – தென்மராட்சிக் கிளை, உணவக உரிமையாளர் சங்கம் சாவகச்சேரி, முன்பள்ளி ஆசிரியர்கள் இணையம் தென்மராட்சி, உள்ளூர் பழ,மர உற்பத்தியாளர் சங்கம் கொடிகாமம் என தென்மராட்சியின் 30 சமூக பொது அமைப்புக்கள் ஆதரவு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
https://www.youtube.com/embed/vm3Ssq578Ak