தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் பொலிஸார் உள்ளிட்ட அதிகாரிகள் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ தனியார் நிறுவனம் அறிக்கையொன்றினை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.
மேலும், பார்வையாளர்கள் அனைவரினதும் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துவதற்கு உரிய தரப்பினருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் தந்தை சாட்சியம்
இதேவேளை, தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி தான் படித்த சர்வதேச பாடசாலையில் கொடுமைகள் நடப்பதாக கூறியதாக அவரது தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரியிடம் சாட்சியம் வழங்கியுள்ளார்.
கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி பயின்ற 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த திங்கட்கிழமை தாமரை கோபுரத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில், அவரது மரண விசாரணை நேற்று முன்தினம் (08) கொழும்பு மாநகர மரண விசாரணை அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றதுடன், உயிரிழந்த மாணவியின் தந்தை கொழும்பு மாநகர திடீர் மரண விசாரணை அதிகாரி முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார்.
இதன்போது உயிரிழந்த மாணவியின் தந்தை வழங்கிய சாட்சியத்தில், தனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் இருப்பதாகவும், உயிரிழந்த மகளின் மூத்த சகோதரி பெலாரஸில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
லண்டன் பொதுப் பரீட்சைக்குத் தயாராகி கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் உயிரிழந்த மகள் கடந்த வாரம் இரண்டு நாட்களாக பாடசாலைக்கு செல்ல மறுத்ததாக தந்தை கூறியுள்ளார்.
சம்பவத்தன்று காலை 7.10 மணியளவில் தனது மகளை பாடசாலையில் இறக்கி விட்டு வெளியேறியதாகவும், மாணவியின் கணினி மற்றும் தொலைபேசியை அடிக்கடி சோதிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இறுதிக்கிரியைகள்
சம்பவத்தன்று மேலதிக வகுப்புகளுக்கு செல்வதாக கூறிய அவர், அந்த வகுப்பில் பங்கேற்காமல் தோழிகளிடம் பொய் கூறிவிட்டு பாடசாலையை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாணவியின் பையில் 1,500 ரூபா, பாடசாலை சீருடை உள்ளிட்ட பல பொருட்களைக் கண்டெடுத்த பொலிஸார், தலையிலும் உடலின் பல பாகங்களிலும் ஏற்பட்ட பலத்த காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.
எனினும் அவர் தற்கொலை செய்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் வைக்கப்பட்ட மாணவியின் சடலத்தின் மீதான இறுதிக்கிரியைகள் நேற்று (09) காலை பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் ஆராய கல்வி அமைச்சு 5 அடங்கிய குழுவொன்றை நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.