ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் சில விடயங்களை
ஒருங்கிணைப்புக் குழுவில் கதைக்காமல் நேரடியாகவே அரசாங்கத்தோடு கதைத்துத்
தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும். அதை விடுத்து இந்தச் சபையில் கதைத்து
நேரத்தை வீணடிக்கின்றீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
நேற்று இடம்பெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்
கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அரச அதிகாரிகளின்
தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் பேசினார்.
மேலும் தேசிய மக்கள் சக்தியின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிய பிரச்சினைகளைப் பற்றி தொடர்ந்தும் அரச
அதிகாரிகளுடன் பேசி முரண்பட்டுக் கொண்டிருந்தனர்.
இந்நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் கட்டுப்படுத்த வேண்டும்…
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களின் போது நாடாளுமன்ற
உறுப்பினர்கள் அரச அதிகாரிகளிடம் கேள்விகளைக் கேட்க முடியும்.
ஆனால், கேள்வி
கேட்பதோடு அவர்கள் நிறுத்த வேண்டும். கேள்விக்கு உரிய பதில்கள் கிடைக்கவில்லை
எனில் நீதிமன்றம் ஊடாகவோ அல்லது வேறு வழிகள் ஊடாகவோ பதில்களைப் பெற்றுக்கொள்ள
முடியும்.
ஆனால், எதுவிதமான ஆதாரமும் இல்லாமல் தனிப்பட்ட நபர்கள் அந்த இடத்தில்
இல்லாதபோது கேவலமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஏனையவர்கள் கதைப்பதை
ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் என்ற வகையில் அமைச்சர் சந்திரசேகர்
கட்டுப்படுத்த வேண்டும்.
ஆளுங்கட்சியில் இருக்கக்கூடிய தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற
உறுப்பினர்களான க.இளங்குமரன், ச.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.ரஜீவன் ஆகியோர் அரச
தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற அடிப்படையில் சில விடயங்களை
ஒருங்கிணைப்புக் குழுவில் கதைக்காமல், நேரடியாகவே அரசாங்கத்தோடு கதைத்துத்
தீர்வைப் பெற்றுக்கொடுக்க முடியும். ஆனால், அதை விடுத்து இந்தச் சபையில்
கதைத்து நேரத்தை வீணடிக்கின்றீர்கள் என குறிப்பிட்டுள்ளார்.