தெவிநுவர துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த உத்தரவானது இன்று (23) மாத்தறை பதில் நீதவானால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை – தெவிநுவர – தியூந்தர சிங்காசன வீதியில் கடந்த (21) ஆம் திகதி இரவு 11.45 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
விசாரணை
இதன்போது, தெவிநுவர பகுதியைச் சேர்ந்த பசிந்து தாரக, 29, மற்றும் யோமேஷ் நதீஷன் ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சந்தேகநபர்களை இன்றையதினம் (23) மாத்தறை பதில் நீதவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இரட்டை கொலை
இதேவேளை, குறித்த இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் துபாயில் தலைமறைவாக இருக்கும் ‘பாலே மல்லி’ என்ற ஷெஹான் சத்சர எனும் பாதாள உலக உறுப்பினர் தொடர்புபட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொலை செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கும் ‘பாலே மல்லி’ என்ற குற்றவாளிக்கும் இடையிலான தகராறின் விளைவாக இந்தக் கொலைகள் நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.