யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமது
வாழ்வாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு எம்மை அகற்ற வேண்டாம் என பேருந்து நிலையத்தில் கடைகளை அமைத்துள்ள வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யாழில் நேற்றையதினம் (20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே வியாபாரிகள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து மேலும்
தெரிவிக்கையில், பேருந்து நிலைய வளாகத்தில் எமது வாழ்வாதாரத்தினை அடிப்படையாகக் கொண்டு கடைகளை
அமைத்து நாம் தொழிலில் ஈடுபட்டு வருகின்றோம். ஒரு கடையில் குறைந்தது மூன்று
பேர் வேலை செய்கின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபை
இதேவேளை எம்மை நம்பியே எமது குடும்பம்
இருக்கின்றது.15 வருடமாக இதனை நம்பியே நாம் வாழ்கின்றோம்.இலங்கை போக்குவரத்து சபை எங்களுக்கு
தமது வளாகத்தில் செயற்பட அனுமதி வழங்கியுள்ளது.
பல்வேறு கடன்களை பெற்றே நாம்
இந்த சிறு முதலீடுகளை ஏற்படுத்தியுள்ளோம். எங்களுடைய பிள்ளைகள் இன்று கல்வி
கற்று வருகின்றார்கள் அவர்களுடைய நிலையும் கவலைக்கிடமானதாக முடியும்.
இலங்கை போக்குவரத்து சபை சேவையினையும் இந்த இடத்தினை விட்டு அகற்ற கூடாது. அந்த சேவை இந்த பகுதியில்
முன்னெடுப்பதன் மூலமே எமக்கு வருமானம் கிடைக்கிறது.
வியாபாரிகள் கோரிக்கை
தற்பொழுது மாநகர சபை இலங்கை போக்குவரத்து சபை யாழ். சாலை முகாமையாளரூடாக 14 நாட்களுக்குள் எம்மை
வெளியேறுமாறு கடிதம் வழங்கியுள்ளனர்.
கோவிட் தொற்றினால் நாம் பாதிக்கப்பட்டோம். பாதிக்கப்பட்ட நாம் இப்பொழுது தான் மீண்டு
வருகின்றோம். ஆகவே இதனை ஆளுநர் கருத்திற்கொண்டு தனது தீர்மானத்தை எமக்காக
கரிசனை கொள்ள வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.