மின்சார கட்டண திருத்தம் தொடர்பான இறுதி அறிக்கையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று (17) வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது அடுத்த 6 மாதங்களுக்கு எவ்வித திருத்தமும் இல்லாமல் மின்சாரக் கட்டணங்கள் அப்படியே பராமரிக்கப்பட வேண்டும் என்ற யோசனையை இலங்கை மின்சார சபை (CEB) சமர்ப்பித்திருந்தது.
இந்த நிலையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இதற்கு எதிர்மறையான முன்மொழிவைச் சமர்ப்பித்துள்ளது.
பொதுமக்கள் ஆலோசனை
அதன்படி, அந்த முன்மொழிவுகளைக் கருத்தில் கொண்டு, மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பாக ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுமக்கள் ஆலோசனை பெறும் செயன்முறை கடந்த வருடம் டிசம்பர் 17 ஆம் திகதி தொடங்கி ஜனவரி 10 ஆம் திகதி முடிவடைந்தது.
குறித்த அமர்வுகளின் போது சுமார் 400 நபர்கள் முன்மொழிவுகளைச் சமர்ப்பித்ததாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
20 சதவீதம் குறைத்தல்
பொதுமக்களால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளை பரிசீலித்தபோது, மின்சாரக் கட்டணத்தை சுமார் 20 சதவீதம் குறைக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
அதன்படி, அந்த திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த பிறகு மின்சார கட்டணங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டுமா? இல்லையா? அல்லது கட்டண திருத்தம் இருந்தால், அது எத்தனை சதவீதமாக இருக்கும்?ஆகிய பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை இன்று (17) வெளியிட திட்டமிட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.