இலங்கை மின்சார சபை (Ceylon electricity board) மேலும் கட்டணக் குறைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ள வருடாந்த பொருளாதார மதிப்பாய்வு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
அதேநேரம், இலங்கை மின்சார சபை அதன் செலவுகளைக் குறைக்காமல் மேலும் கட்டணக் குறைப்புகளை மேற்கொள்ளக் கூடாது என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வாறு இல்லாத நிலையில் இலங்கை மின்சார சபையின் நிதி செயல்திறன் குறையலாம் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
[YBVDXKR]
மக்களுக்கு மின்சார சபை அறிவிப்பு
மின் அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் இலங்கை மின்சார சபை வெளியிடும் குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் பட்சத்தில் வீட்டின் கூரைகளில் உள்ள சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்களிடம் மின்சார சபை வேண்டுகோளை விடுத்துள்ளது.

அவ்வாறு குறுஞ்செய்தி கிடைக்கப்பெறும் சந்தர்ப்பத்தில் பிற்பகல் 3 மணி வரையில் சூரிய மின்படலங்களை செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் கடந்த 13 ஆம் திகதி முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
மேலும், நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

