2026 ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து போட்டி நிறைவடைந்துள்ள நிலையில், அர்ஜென்டினா அணி மற்றும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஃபிஃபா அறிவித்துள்ளது.
ஃபாக்லாந்து தீவுகளுக்கு உரிமை கோரும் பதாகையை காட்சிப்படுத்தியது உட்பட பல விதிமீறல்கள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவே விசாரணைகள் நடத்தப்பட உள்ளளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
ஃபிஃபா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளது.
பாகுபாடு காட்டும் கோஷங்கள்
இங்கிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அர்ஜென்டினா வீரர்கள் “ஃபாக்லாண்ட்ஸ் அர்ஜென்டினாவிற்குச் சொந்தமானது” என்று பொருள்படும் “லாஸ் மால்வினாஸ் சோன் அர்ஜென்டினாஸ்” என்ற வாசகம் அடங்கிய பதாகையை ஏந்தியபடி கொண்டாடினர்.

அத்துடன் பல அர்ஜென்டினா போட்டிகளின் போது, பாகுபாடு காட்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள், மீண்டும் மீண்டும் தாமதமாகத் தொடங்கப்பட்ட போட்டிகள், போட்டி மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றத் தவறியது, அணி மற்றும் பார்வையாளர்களால் காட்டப்பட்ட பொருத்தமற்ற செய்திகள், மற்றும் ரசிகர்களால் வீசப்பட்ட பொருட்கள் ஆகியவை குறித்தும் ஃபிஃபா விசாரணை நடத்துகின்றது.
அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் தோற்கடித்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியைத் தொடர்ந்து நடந்த மோதலில் ஈடுபட்ட வீரர்கள் மீது தனி ஒழுங்கு நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.
மேலும் அர்ஜென்டினா வீரர்களான நஹுயல் மோலினா மற்றும் லியாண்ட்ரோ பரேடெஸ், மற்றும் அர்ஜென்டினா அதிகாரியான ராபர்டோ அயலா ஆகியோர் மீது தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்ற குற்றச்சாட்டின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
Source: https://ibctamil.com/article/fifa-disciplinary-proceedings-against-argentina-1785376198

