பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான சுமையை பணம் படைத்தவர்கள் பகிர்ந்துக் கொள்ள வேண்டுமே அன்றி ஏழை தொழிலாளர் வர்க்கத்தினர் அல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதன் பின்னர் சரவதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாகவும் சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த அடுத்த தவணை நிதியான 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க முன்னர் நிதியத்தின் மீளாய்வு நடவடிக்கைகள் இடம்பெறும்.
குறித்த மீளாய்வு, ஜனாதிபதி தேர்தலின் பின்னர் நடத்தப்படும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கொசக் தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை அரசாங்கம் அதனுடைய சில கடன் வழங்குநர்களிடம் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை இன்னும் நிறைவு செய்யவில்லை.
இந்நிலையில், அரசாங்கம் அதன் தனியார் கடன் வழங்குநர்களுடன் 12.6 பில்லியன் செலுத்தாத கடன் பத்திரங்களுக்கான கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தையை இந்த வாரம் நடத்தவுள்ளது.
வரிச் சுமையை குறைத்தல்
தேர்தளுக்கு முன்னர் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்யும் நோக்கில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.
இந்நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் எவ்வாறான மாற்றங்கள் சஜித் தரப்பால் முன்மொழியப்பட உள்ளன என்பது தொடர்பில் அவர் இதுவரை தெரிவிக்கவில்லை.
இருப்பினும், தற்போதைய அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நிபந்தனைகளை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேம்படுத்தப்பட்ட சமூக சந்தைப் பொருளாதாரம், ஏற்றுமதி வர்த்தகத்தை விரிவுப்படுத்தல், வரிச் சுமையை குறைத்தல் மற்றும் ஊழலை கட்டுப்படுத்தி சட்ட ஆட்சியை வலுப்படுத்துதல் போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.