பிரித்தானியாவின் வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் (FCDO) பிரபல சுற்றுலா தலங்களில் பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்து தனது சுற்றுலாப் பயணிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இலங்கையில் (Sri Lanka) பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் இங்கிலாந்து சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
இங்கிலாந்தின் மிரர் செய்தி ஊடகம் பிரசுரித்துள்ளது.
அமெரிக்காவின் (USA) சில இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில், பிரித்தானிய ஊடகம் இந்த பயண ஆலோசனை பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல்
பிரபலமான சுற்றுலா தலங்களை பயங்கரவாத குழுக்கள் குறிவைக்க வாய்ப்புள்ளதாக, வெளியுறவு அலுவலகம் 2024 நவம்பர் மாதம் 14ஆம் திகதி தமது பயண ஆலோசனையில் தெரிவித்துள்ளதாக இந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே இலங்கை செல்லும் இங்கிலாந்து நாட்டவர்கள், நெரிசலான பொது இடங்களைத் தவிர்த்து, தங்கள் சுற்றுப்புறங்களில் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உலகளவில் இங்கிலாந்தின் நலன்களையும் அதன் மக்களையும் பாதிக்கும் பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதாக தெரிவித்துள்ள இங்கிலாந்தின் வெளியுறவு அலுவலகம், உலக நாடுகளுக்கு செல்லும் தமது நாட்டவர்களையும் எச்சரித்துள்ளது.
உலகளாவிய பதற்றங்கள்
இந்தநிலையில், வெளிநாடுகளில் இருக்கும்போது பயங்கரவாதத்தால் ஏற்படும் ஆபத்தை குறைப்பதற்கான உள்ளூர் ஊடக அறிக்கைகளைப் இற்றைப்படுத்திய நிலையில் வைத்திருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனையைப் பின்பற்றுமாறும் வெளியுறவுத்துறை வலியுறுத்தியுள்ளது
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான தொடர்ச்சியான மோதலின் விளைவாக அதிகரித்து வரும் உலகளாவிய பதற்றங்கள் காரணமாக வெளியுறவு அலுவலகம் சில இடங்களுக்கான பயண ஆலோசனையைப் புதுப்பித்துள்ளது.