கிண்ணியா பிரதேச சபை பிரிவுக்குட்பட்ட, கொழும்பு பிரதான வீதியில், சிவப்பு பாலத்துக்கு அண்மித்த வீதி ஓரங்களில் குப்பை கூளங்கள் நிறைந்து காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
போத்தல்கள், பிளாஸ்டிக் போத்தல்கள், பொலித்தீன்கள், பழுதடைந்த உணவுப் பொருட்கள், வீட்டுக் கழிவுகள், உணவகங்களில் உள்ள மாமிச கழிவுகள் மற்றும் வைத்தியசாலை கழிவுகள் உள்ளிட்ட பல்வேறு கழிவுகள் இந்தத் தெரு ஓரங்களில் குவிந்து காணப்படுகின்றன.
இந்தப் பகுதியில், இனந் தெரியாதோரால், இரவு நேரங்களில், இவ்வாறான கழிவுகள் தொடர்ச்சியாக வீசப்பட்டு வருவதால் சுற்றுப்புற சூழலுக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கோரிக்கை
குறித்த வீதியில் சுமார் நூறு மீற்றர் தூரம் வரை மூன்று இடங்களில் இவ்வாறு கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.
இந்த கழிவுகளை நாடி, யானைகளும் முதலைகளும் இந்தப் பகுதியில், நடமாடி வருவதாகவும், இதன் காரணமாக அந்தப் பகுதியால் பிரயாணம் செய்வது ஆபத்தானதாக மாறி இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
எனவே, கிண்ணியா பிரதேச சபை இந்த விடயத்தில், உரிய கவனம் செலுத்தி, சுற்றுச்சூழலை பாதுகாக்க பொருத்தமான நடவடிக்கை எடுக்குமாறு, மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.